இலங்கை தமிழரை வைத்து அரசியல் நடத்தவேண்டாம் : முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாமல் கோரிக்கை
தென்னிந்தியாவில் வசிக்கும் 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நம்பிக்கையளிக்கும் கோரிக்கை
"பல தசாப்தங்களாக முகாம்களில் வசித்து வரும், ஸ்திரத்தன்மை, கௌரவம் மற்றும் பாதுகாப்பான சட்ட அந்தஸ்தை எதிர்பார்க்கும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு இக்கோரிக்கை நம்பிக்கையளிக்கிறது.

எனினும், இக்கோரிக்கையானது உண்மையான மனிதாபிமான அக்கறையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை இலக்காகக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும் நாங்கள் உண்மையாக நம்புகிறோம்.
ஏனெனில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான காலகட்டங்களில் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மகிந்தவின் காலத்தில் இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வசதி
30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பாக நாடு திரும்புவதை எமது அரசாங்கம் தொடர்ந்து எளிதாக்கியது.

சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அவர்கள் தமது தாய்நாட்டில் கௌரவமாக தமது வாழ்க்கையைக் மீளக்கட்டியெழுப்புவதற்குப் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது தமிழக முகாம்களில் இருந்து நாடு திரும்ப விரும்புவோர் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. நாடு திரும்ப விரும்புவோரின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் கவனமாகப் பரிசீலித்து, தேவையற்ற தடைகளின்றி அவர்கள் சமூகத்துடன் இணைவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்
இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இலங்கைக்குத் திரும்பி, இங்கு உரிமையுள்ள குடிமக்களாக வாழ முடியும்.
The plea by Tamil Nadu CM Thiru @mkstalin to Indian PM Hon. @narendramodi seeking Indian citizenship or long-term visas for 89,000 Sri Lankans living in southern India is indeed a welcome move for them.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 16, 2026
It offers hope to thousands of those Sri Lankan Tamils who have been living…
இந்த 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கு நாமே பொறுப்பு. இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களையும், தமிழக அரசாங்கத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களினதும் உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையிலான நிலையான தீர்வொன்றை நோக்கி நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்," என நாமல் ராஜபக்சதனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |