இந்திய கடலோரக் காவல் படைக் கப்பல் திருகோணமலைக்கு விஜயம்
இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘சுஜய்’ (Sujay) எனும் சமர்த் (Samarth) வகை கடலோர ரோந்துக் கப்பல்,இன்று (23)ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையினரால் (National Cadet Corps) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச சைக்கிள் பயணத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்கும், செயல்பாட்டு இடைநிறுத்தப் பணிகளுக்காகவும் (Operational Turnaround – OTR) வருகை தந்துள்ள இக்கப்பல், நவம்பர் 25ஆம் திகதி வரை திருகோணமலையில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்புறவு சந்திப்பு
கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து, அதன் கட்டளை அதிகாரியான DIG விவேக் டோக்ரா (DIG Vivek Dogra), கிழக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.வி. பெர்டினாண்டுஸ் (Rear Admiral PV Ferdinandusz) மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியப் பணிப்பாளர் கமாண்டர் ஐ.பி. விஜேசிங்க (Commander IP Wijesinghe) ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன (Rear Admiral Ruwan Rupasena) கப்பலுக்கு விஜயம் செய்து, அங்கு பணியாற்றும் இந்திய கடலோரக் காவல் படையினருடன் கலந்துரையாடினார்.
இதன்போது, இந்தியக் கப்பலின் பணியாளர்கள் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் படையினருடன் தொழில்சார் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பரிமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |