பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார்: வடக்கு ஆளுநரிடம் உறுதியளித்த இந்திய துணை தூதுவர்
தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (28) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு
மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது இந்திய துணைத் தூதுவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்கமைய, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என தூதுவர் செவிதி சாய் முரளி தெரிவித்துள்ளார்.
துணைத் தூதுவர் உறுதி
மேலும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுக்கொடுக்கவும், தீவுகளுக்கான படகு சேவையை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான வசதிகளை ஒழுங்கு செய்வதுடன், தரை மற்றும் கரையோர தூய்மை திட்டத்திற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தூய்மை திட்டத்திற்கு தேவையான நிதியை இந்திய துணை தூதரகத்திலிருந்து ஒதுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்