இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று(19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள்
இன்று காலை 9:30 மணிக்கு மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற கடற்றொழிலாளர்கள் துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் திகதி இராமேஸ்வரம் மீன்பிடி, அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து இந்திய கடற்றொழிலாளர்கள் பேரணியாக வந்து கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |