இந்திய அரசு பேருதவி புரிய வேண்டும்! இலங்கையின் நிலை தொடர்பில் திருமாவளவன் கோரிக்கை
இலங்கையில் வீசிய 'டிட்வா' புயல் காணச் சகிக்காத கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சுனாமி ஏற்படுத்திய பொருளாதார அழிப்பைவிட இப்போதைய டிட்வா புயல் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பாதிப்பு பன்மடங்கு அதிகமென்றும், இத்தகைய பெரும்பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டெழ பல ஆண்டுகளாகுமென்றும் தெரியவருகிறது எனவும் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“இந்த நெருக்கடியான பேரிடர்காலச் சூழலில், இந்திய ஒன்றிய அரசு மனிதாபிமான அடிப்படையில் பேருதவி புரிந்திடவேண்டும்.
தற்போது நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு, தமிழ் மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்கள் மீண்டெழும் வகையில் தொடர்ந்து உதவிசெய்ய வேண்டும்.
இப்புயல், மழை,வெள்ளத்தால் தென்னிலங்கையிலும் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே, மலையகப்பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
மலையகத்தமிழர்களின் வாழ்நிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய 'காலநிலை சார்ந்த இயற்கை பேரழிவாக' இந்த டிட்வா பதிவாகியுள்ளது” என கூறியுள்ளார்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |