இந்தியப் பெருங்கடல் ரிம் சங்க மாநாடு இலங்கையில்!
இந்தியப் பெருங்கடல் ரிம் சங்க மாநாட்டின் 23 ஆவது அமைச்சர்கள் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் ரிம் சங்க மாநாட்டின் 23 ஆவது அமைச்சர்கள் கூட்டத்துக்கு இம்முறை இலங்கை தலைமை தாங்கி நடத்தவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
ஆயத்தங்கள்
இந்த கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா, பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 16 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு வரவுள்ளதுடன், அவுஸ்ரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் வரவுள்ளனர்.
அத்துடன், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்க மாநாட்டின் 23 ஆவது அமைச்சர்கள் கூட்டத்தின் தலைமை பொறுப்பு பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சரால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கலந்துரையாடல்
வர்த்தகம், முதலீடு, அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட முக்கிய ஆறு விடயங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து இந்த கூட்டத்தின் போது அமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை இந்த கூட்டத்தின் பக்க சந்திப்பாக வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியுயோர்க்குக்கான பயணத்தின் போது கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் மாநாடு குறித்த மலேசிய பிரதமருடன் ரணில் விக்ரமசிங்க பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.