ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதி..! திமுக காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு: ராஜ்நாத் சிங்
இலங்கைக்கு கச்சதீவை பரிசாக கொடுத்த காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தமிழர் உரிமைகள் குறித்துப் பேச தகுதியில்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும், கடற்தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகவும், பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாகவும் மாறியுள்ளது.
முன்னணியில் இந்தியா
பிரதமராக மோடி ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடப் பொருட்களின் ஏற்றுமதி, இன்று ரூ.26 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது.
அதுபோல் 5ஜி மொபைல் இணைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் 6ஜி-க்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகிலேயே மிக மலிவான மொபைல் டேட்டா சேவை இந்தியாவில்தான் கிடைக்கிறது.
இதற்கு பிரதமர் மோடியின் நுட்பமான ஆட்சித் திறனே காரணம். இதன் காரணமாக நாட்டில் சாமானிய குடிமகன்கள் கூட சிறிய பணப் பரிவர்த்தனைகளைக் கூட டிஜிட்டல் முறையில் செய்து பயனடைந்து வருகிறார்கள்.
நாட்டிலேயே தமிழகத்திலும், உத்தர பிரதேசத்திலும் மட்டுமே 2 பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு நடந்த அநீதி
மோடி அரசில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனாலும், நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ள மோடி குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். சேற்றை வாரி இறைக்கிறார்கள். எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அதே அளவுக்கு தாமரை மலரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும், கடற்தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு.
இந்த 2 கட்சிகளும் சேர்ந்துதான் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக கொடுத்தன. இதனால் அவர்கள் தமிழர்கள், கடற்தொழிலாளர் உரிமை குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை.
தேசம் தான் முதன்மையானது என்பது எங்கள் நோக்கம். ஆனால், குடும்பம் தான் முதன்மையானது என்பது எதிர்க்கட்சியினரின் நோக்கம். என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |