இந்திய உப அரசதலைவரின் வடக்கு பயணம் இருட்டடிப்பா?
இலங்கையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் நடத்திய குருரமான போரை நிறுத்தக் கோரி உண்ணாநிலையிருந்தது தியாகச்சாவடைந்த அன்னை பூபதியின் நினைவேந்தல் நாளான இன்று இந்திய துணை அரசதலைவரும் தமிழருமான சி. பி. ராதாகிருஷ்ணன் சிறிலங்காவில் தரையிறங்கி தனது நிகழ்ச்சிநிரல்களை கடந்துவருகிறார்.
தனது இரண்டு புதல்வர்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட நிலையிலும் இன்னொரு புதல்வர் பூசா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மக்களுக்கான அறவழிபோராட்டத்தில் உயிர்துறந்த அன்னை பூபதி தியாகி திலிபனுடன் தமிழர் தாயகத்தின் இன்னொரு தியாக அடையாளம்.
இன்று தனது பயண நிகழ்சிநிரல்களில் ஈடுபட்டுவரும் இந்திய துணை அரசதலைவரின் பயணத்திட்டத்தில் சில அதிகாரபூர்வ ஒளிப்பு மறைப்புகள் உள்ளதான ஐயங்கள் எழுகின்றன.
ஏனெனில் முல்லைத்தீவில் இந்திய நிதியுதவியால் உருவாக்கப்படும் மருத்துவமனைத் திட்டமும் அவரால் பார்வையிடப்படுமென சொல்லப்பட்டாலும் அவரது முல்லைத்தீவுக்கு பயணத்தில் அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல்கள் அதிகம் இல்லை.
இந்திய உப அரசதலைவருடனான சந்திப்பில் பங்கெடுக்கும் தமிழ் கட்சிகள் தமது தரப்பில் இருந்து மாகாணசபை தேர்தல் மற்றும் புதிய அரசியல் அமைப்பின் இழுத்தடிப்பு குறித்த அழுகுணி முறைப்பாடுகளை வழமைபோல ஒப்புவித்து ஓய்ந்துகொள்வார்கள் என்பதும் எதிர்பார்க்கத்தக்கதே.
அனுர குமார திசாநாயக்காவின் மாலிமாவ ஆட்சி இப்போது நிலக்கரி ஊழல் உட்படட சில முக்கிய சவால்களை கடுமையாக எதிர்கொள்ளும் நிலையில் இந்த பயணம் இடம்பெறும் பின்னணியில் உலகில் ஹோர்முஸ் நீரிணை என்ற ஒரு சிறிய கடற்பகுதி மீண்டும் கொதிக்கும் நிலையில் உள்ளுர் மற்றும் உலகநிலவரங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..