யேமனில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: மத்திய அரசு எடுக்கவுள்ள முடிவு
யேமன் நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்காக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, செவிலியராக 2008ஆம் ஆண்டு வேலைக்காக யேமனுக்கு சென்று 2011ஆம் ஆண்டு டோமி தாமஸை திருமணம் செய்து கொண்டு, குடும்பத்துடன் அங்கயே தங்கியுள்ளார்.
பின்னர், தலோல் அப்டோ மஹ்தி என்ற ஏமன் நபருடன் சேர்ந்து ஒரு தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
குற்றச்சாட்டு
இந்த நிலையில், பணம் தொடர்பான முரண்பாடுகளால், மஹ்தி, நிமிஷாவை குறித்த நிறுவனத்தில் இருந்து விலக்க முயன்றதாகவும், தன்னுடன் தவறான உறவில் இருப்பதாக அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைதொடர்ந்து, தனது கடவுச்சீட்டை கைப்பற்றிய மஹ்திக்கு, மயக்க மருந்து செலுத்தி அதனை மீட்க செய்த முயற்சியில் மருந்து மிகைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தண்டனையை குறைக்க நடவடிக்கை
இந்த வழக்கில், நிமிஷா பிரியாவுக்கு யேமனில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தண்டனை வரும் 16ம் திகதி நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிமிஷாவின் தாயார் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மத்திய அரசு தலையிட்டு தூக்கு தண்டனையை தடுத்து, தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, வழக்கை வரும் திங்கட்கிழமை (ஜூலை 15) பட்டியலிட உத்தரவிட்டுள்ளது. இதனுடன், மனுவுக்கான பதிலை மத்திய அரசின் சட்ட அதிகாரிகள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
