புவிசார் அரசியலே இந்திய- இலங்கை ஒப்பந்தம்
13 ஜ நடைமுறைப்படுத்தத் தமிழ்க் கட்சிகள் மூலோபாயம் வகுக்கத் தேவையில்லை. கட்சிகளாக நின்று தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும், இன அழிப்பை வெளிப்படுத்திச் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஒரு தேசமாக எழ வேண்டும். தேசமாக எழுதல் என்பது ஜனநாயகத்தின் கூட்டு உரிமை. அந்தக் கூட்டு உரிமை பிரிவினைவாதமும் அல்ல. ஆகவே கூட்டு உரிமையை ஒரு தேசமாக நின்று வெளிப்படுத்துவதற்கான மூலோபாயம் மாத்திரமே தமிழர்களுக்குத் தேவை-
அ.நிக்ஸன்
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நீதியான தீர்வை வழங்க வேண்டுமெனக் கூறிக்கொண்டு புவிசார் அரசியல் நோக்கிலேயே இந்தியா அன்று முதல், இன்று வரை இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. இதனை நன்கு அறிந்து கொண்ட இலங்கை, இந்திய இராஜதந்திரத்தை அன்று முதல் ஏமாற்றி வந்தது என்பதையே வரலாற்று காணபிக்கிறது.
தமிழர் பிரச்சினைய இந்தியா சாதகமாகப் பயன்படுத்துவதாக ஊடகங்களும் அன்றே வெளிப்படுத்தியிருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் அன்றைய புவிசார் அரசியல் நோக்கமேயன்றி இனப்பிரச்சினைத் தீர்வுக்கானதல்ல என்று முன்னாள் சோவியத் யூனியனின் வார இதழான பிராவ்டா அன்று விமர்சித்திருந்தது.
பாகிஸ்தான்- இஸ்ரேல் ஆலோசகர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றுவது உள்ளிட்ட இந்திய ஏகாதிபத்திய நலன்கள் இந்த ஒப்பந்தத்தில் இருந்ததாக பிராவ்டா வார இதழ் கூறியிருந்தது. அத்துடன் திருகோணமலைத் துறைமுகத்தையும் அங்கு இராணுவத் தளம் ஒன்றை அமைக்கும் அமெரிக்கத் திட்டத்திற்கான ஆதரவும் மற்றுமொரு பிரதான காரணம் என்றும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாக பிரவ்டா இதழில் வெளியான அந்தக் கட்டுரையை கொழும்பில் இருந்து அன்று வெளிவந்த தி.ஐலண்ட் ஆங்கில வார இதழ் பிரசுரித்திருந்தது. ஐலண்ட் இதழில் வெளியான பிராவ்டா கட்டுரைக்கு அப்போது கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் ஸ்பெயின் மறுப்பும் வெளியிட்டிருந்தார்.
அதாவது திருகோணமலையில் அமெரிக்கப் படைத் தளங்களை அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லையெனவும் அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார். தூதுவரின் மறுப்பையும் ஐலண்ட் வார இதழ் வெளியிட்டிருந்தது.
அமெரிக்க சோவியத் யூனியன் பணிப்போர் அன்று இருந்தது. அத்துடன் அமெரிக்காவுடன் நட்பை உருவாக்கும் நோக்கமும் புதுடில்லிக்கு அப்போது மறைமுகமாக இருந்தது. இதனால் திருகோணமலையில் தளம் அமைக்கத் தனது ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா முற்பட்டிருக்கலாமென பிராவ்டா இதழ் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, அமெரிக்க, பாகிஸ்தான் சார்பான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தாதாகவும், இதனால் பிராந்தியப் பாதுகாப்புக் கருதியே 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற யூலைக் கலவரத்தைப் பயன்படுத்தி இந்தியா தமிழர் பிரச்சினையில் தலையிட்டது என்றும் இலங்கை அரசியல் விமர்சகர் எம்.எஸ்.எம். ஐயூப் இந்திய 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலிமிரர் ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் பின்னணியில் அமெரிக்கப் பாகிஸ்தான் உறவு தொடர்பாக அன்று இந்தியா அதிக கவனம் செலுத்தியிருந்தன் வெளிப்பாடுதான், ஈழத்தமிழர் விவகாரத்திலும் இந்திய அதிக அக்கறை செலுத்தியிருந்தது என்ற கருத்துக்களே அன்று தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தன. ஆனாலும் அன்று ஈழப் போராளிகள் முன்வைத்திருந்த தனிநாட்டுக் கோரிக்கையை இந்திய ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படை.
இந்தியாவின் இந்தக் கொள்கை ஈழப் போராளிகளுக்கும் தெரிந்ததெனக் கவிஞர் புலமைப்பித்தன் இறப்பதற்குக் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். போராளிகளை ஆதரிப்போன் ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்க முடியாதென அன்று இந்திராகாந்தி தன்னிடம் கூறியிந்ததாக புலமைப்பித்தன் தெரிவித்திருந்தார் என்று கூர்மை இணையத்தளத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் கட்டுரை வெளியாகியிருந்தது.
ஆகவே இவ்வாறான கருத்துக்களின் பின்னணியில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நோக்கினால், பிராந்தியத்தில் இந்தியப் பாதுகாப்பு நலன் இருந்தது என்பது வெளிப்படை. அத்துடன் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரத்தையும் ஈழத் தமிழர்களுக்கு வழங்க இந்தியா அன்று விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதை இந்த ஒப்பதத்தைக் கைச்சாத்திடுவதற்கான உரையாடல்கள் மூலம் அறிய முடிகின்றது.
ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன. இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு ஏற்றதான அரசியல் தீர்வுக்கு இந்தியா இணங்கியிருப்பதாகக் கூறியிருந்தார். இந்தச் செய்தி 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
கொழும்பில் இருந்த அப்போதைய இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் மூன்று நாட்களில் இரண்டு தடைவ ஜே.ஆர். ஜயவர்த்தனாவைச் சந்தித்திருந்தார். அப்போதுதான் இலங்கைக் குடியரசின் அரச கொள்கையான ஒற்றையாட்சி அரசியல் யாப்பு முறைமைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைப்பது குறித்தும் பேச்சுக்கள் நடந்திருக்க வேண்டும்.
ஆனால் ஜே.ஆர். ஜயவர்த்தனவுடன் டிக்ஸ்ற் நடத்திய பேச்சுக்களில் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சித் தீர்வை வலுயுறுத்தியதாக இந்தியத் தூதரக வட்டாரங்களை மேற்கோள்காண்பித்து அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் அப்போது கொழும்பில் இருந்து வெளியான ஐலண்ட் ஆங்கிலப் வார இதழில் இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேதான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு என்பதை தூதுவர் டிக்சிற் ஏற்றுக்கொண்டதாகச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் மூத்த தலைவர் அமர்தலிங்கம் அப்போது டில்லியில் இந்திய இராஜதந்திரிகளைச் சந்தித்திருந்தார். கொழும்பிலும் தூதுவர் டிக்சிற்றைச் சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவது குறித்துப் பேசியிருக்கிறார். இந்தச் செய்தி உதயன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
ஆனால் ஒற்றையாட்சியை வலியுறுத்தியே டிக்சிற் பேசியதாக அந்தச் செய்தியில் கூறப்படவில்லை. மாறாக வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரத்தை தமிழர்கள் விரும்புவதாக அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியதாக மாத்திரமே உதயன் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் 19-07-1987 அன்று கொழும்பில் நடந்த ஜாதிகசேவைய சங்கமயவின் 20 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜே.ஆர்.ஜயவர்த்தன. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள்ளேதான் தீர்வு என்று கூறியிருந்தார். இந்த செய்தியும் உதயன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
யூலை மாதம் 29 ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று த குவாறா என்ற கேள்வி பதில் இணையத்தளத்தில் கடந்த ஆண்டு யூன் மாதம் வெளியாகியிருந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக அந்தோணி தேவசகாயம் எழுதிய கட்டுரையிலேயே அந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
முக்கியமாக நான்கு விதப்புரைகளை முன்வைத்து எழுதப்பட்ட கடிதத்தில் அந்த விதப்புரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டால், ஒப்பந்தம் கைச்சாத்தாகுமெனக் குறிப்பிடப்பட்டீருந்தது.
ஓன்று- இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும் வகையிலோ, இருநாடுகளினதும் பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ வேறு நாடுகளின் இராணுவத்தையோ அல்லது புலனாய்வுத் துறையினரையோ இலங்கையில் கடமையாற்ற அனுமதிக்கக் கூடாது. இரண்டாவது- இந்தியாவின் நலன்களுக்கு எதிராக, அதன் பாதுகாப்பைப் பலவீனமாக்கும் வகையில் திருகோணமலைத் துறைமுகமோ அல்லது இலங்கையில் உள்ள வேறு எந்தத் துறைமுகமோ வேறு நாடொன்றின் இராணுவப் பாவனைக்கு அனுமதிக்க முடியாது. முன்றாவது- திருகோணமலையில் அமைந்திருக்கும் பாரிய எண்ணெய்த் தாங்கிகளை இந்தியா தலைமையிலான நிறுவனம் ஒன்று பொறுப்பேற்கும் நான்காவது- இலங்கையில் இயங்கிவரும் சர்வதேச நாடுகளின் ஓலிபரப்பு நிலையங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மாத்திரமே வழங்கமுடியும்.
அத்துடன் இரராணுவ மற்று உளவுத்துறைகளில் இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்பிற்கும் எதிராகச் செயற்படக்கூடாது. இந்த நான்கு விடயங்களையும் உறுதிப்படுத்தி ஒப்புக் கொண்டால், இந்தியா பின்வரும் மூன்று விடயங்களைச் செய்ய உறுதியளிக்கும்.
ஓன்று- இந்தியாவில் இருந்துகொண்டு இலங்கையின் பாதுகாப்பிற்கு, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, பிரிவிவினைவாதத்தைத் தூண்டும் நபர்களை இந்தியா இலங்கைக்கு நாடுகடத்தும். இரண்டாவது- இலங்கை இராணுவத்திற்கு இராணுவ உதவிகள், ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை இந்தியா வழங்கும். மூன்றாவது- மேற்படி விடயங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய- இலங்கை அரசுகளிடையே அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்படும்.
ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் உறுதிப்படுத்தி ஒப்பக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தமிழர்களின் அரசியல் விடுதலைக்காகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு இன்று வரை கூறுவதை தமிழர்கள் ஏற்கத் தயங்குவதற்குக் காரணமெனலாம்.
மாகாண சபைமுறையை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு அரசியல் தீர்வு எதனையுமே எதிர்பார்க்கக் கூடாதென அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.கே. சிங், உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். 1988 ஆம் ஆண்டு இஸ்லாமபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டுக்குச் சென்றிருந்த எஸ்.கே. சிங், அங்கு ஊடகவியலாளர்களிடம் இதனைத் கூறியிருந்தார்.
ஆனால் என யாழ் பல்கலைக்கழகக் கைலாசபதி அரங்கில் 17-08-1987 அன்று இடம்பெற்ற மாபெரும் மக்கள் கலந்துரையாடலில் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாத இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்க முடியாதெனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. பேராசிரியர் க.சிவத்தம்பி. மூத்த விரிவுரையாளர் ஜனாப் சித்திக், செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்குபற்றியிருந்த கலந்துரையாடலில், இலங்கையின் ஒற்றையாட்சி முறை முற்றாக நிராகரிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் ஒன்றுசேர வேண்டிய காலமிது என பேராசியர் சிவத்தம்பி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் இந்திய நலன் சார்ந்தது என விரிவுரையாளர் ஜனாப் சித்திக் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தச் செய்தி அன்று வெளியான உதயன் பத்திரிகையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதேவேளை, மாகாண சபைமுறை உருவாக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்க இந்திய அதிகாரிகள் இருவர் 17-08-1987 அன்று கொழும்புக்கு வந்திருந்தனர். இந்தச் செய்தியை அன்று வெளியிட்ட ஜலண்ட் ஆங்கிலப் பத்திரிகை அதிகாரப் பரவலாக்கத்தை உருவாக்கவுள்ள 13 ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்குள் அடங்கும் என்றும் கூறியிருந்தது.
இந்தியக் குழுவில் வெளியுறவு இணைச் செயலாளர் குல்ப்டிப்சகா தேவ், சட்டவல்லுநர் எஸ்.பாலகிருஸ்ணன் ஆகியோரும். இலங்கைக் குழுவில் ஜனாதிபதியின் செயலாளர் மெனிக்சித்தவெல, பீலிக்ஸ் அபயசிங்க, கலாநிதி டபிள்யு ஜெயவர்த்தன ஆகியோரும் அடங்கியிருந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்தக் குழுக்களோடு இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், உப தலைவர் சம்பந்தன் ஆகியோரும் 13 ஆவது திருத்தச் சட்ட உருவாக்கத்துக்கான ஆலோசணைகளை வழங்கியிருந்ததாக அன்று வெளியான உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் சட்டத்தரணி நீலன் திருச்செல்வத்திடம் தமிழர்விடுதலைக் கூட்டணி ஆலோசணை பெற்றிருந்தது என்றும் இந்தியத் தூதுவர் டிக்சிற்றுடன் கலந்துரையாடினர் எனவும் உதயன் பத்திரிகைச் செய்தியில் மேலும் கூறப்பட்டிருந்தது.
ஆகவே தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு (தற்போது தமிழரசுக் கட்சி) எல்லாமே தெரிந்திருக்கிறது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயங்கள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முன்னரே தெரிந்திருந்தவொரு நிலையிலும், அன்றைய தமிழர்விடுதலைக் கூட்டணி ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை என்ற கேள்வியும், 13 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஏன் மாகாண சபை முறையை எதிர்த்தார்கள் என்ற சந்தேகமும் எழுகின்றன.
எனவே தமிழர் விடுதலைக்கூட்டணி அன்றும் இன்றும் இரட்டை நாக்கு அரசியலில் ஈடுபடுகின்றது. அத்துடன் இந்தியா சொல்வதையே கேட்கின்றது என்பதும் இங்கே பகிரங்கமாகிறது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க முடியாதென டிக்சிற் ஜே.ஆர்.ஜயவர்த்தனவிடம் அன்றே வெளிப்படையாகக் கூறியதைக்கூட ஏன் அன்று சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயத்தை ஏன் அன்று எடுத்துரைக்கவில்லை? புலிகளின் தலைமையோடு இந்தியா பேசுகிறது என்பதற்காக இவர்கள் அமைதியாக இருந்திருந்தார்கள் என்ற கதையும் உண்டு.
ஆனாலும் 13 ஆவது திருத்தச் சட்ட உருவாக்கத்தில் பங்குபற்றியபோது சுயநிர்ணய உரிமை குறித்த நியாயத்தை சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியேர் அன்று வெளிப்படுத்தியதாக எங்கும் செய்திகள் இல்லை. ஆகவே பிராவ்டா இதழ் கூறியது போன்று இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்புக்காக உருவானதே இந்த ஒப்பந்தம் என்பதும், தமிழர்களைச் சமாதானப்படுத்தவே13 என்ற எலும்புத்துண்டு என்ற முடிவுக்கும் வரலாம்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் எழுந்த இந்தோ- பசுபிக் விவகாரம் மற்றும் மன்னார். திருகோணமலை, மலாபார். இந்தியாவின் நிக்கோபார் கடல் பிரதேசங்கள் ஊடக தென் சீனக் கடல் வரை பாதை அமைக்கும் சீனாவின் திட்டத்திற்கும் தற்போதைய தென் சீனக் கடல் விவகாரத்துக்கும் காரணம் எது என்பதை இந்திய இராஜதந்திரமும் இந்தியப் படைத்தரப்பும் அறியாததல்ல.
தமது இராஜதந்திரத் தோல்வியை மறைக்கவும் தம்மை நியாயப்படுத்தவுமே 13 பற்றி இந்தியா ஒவ்வொரு தடவையும் பேசுகிறது என்பது கண்கூடு. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில், 13 இன் உண்மையான உள் உடல் வெட்டப்பட்டுக் குற்றுயிராகித் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அதனை உரிய முறையில் காப்பாற்றி நடைமுறைப்படுத்த வேண்டியது சிங்கள ஆட்சியாளர்களின் கடமை.
இதற்குத் தமிழக் கட்சிகள் மூலோபாயம் வகுக்க வேண்டிய அவசியமேயில்லை. இந்தியாவோ. ஜெனீவாவோ அழுத்தம் கொடுக்கவும் தேவையில்லை. அந்தப் 13 இல் இருந்து சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் பேச்சுக்கான தயார்படுத்தல் மாத்திரமே அவசியமானது- தமிழ்த் தேசியக் கட்சிகள் வெவ்வேறாக நின்று தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும், இன அழிப்பை வெளிப்படுத்திச் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஒரு தேசமாக எழ வேண்டும்.
தேசமாக எழுதல் என்பது ஜனநாயகத்தின் கூட்டு உரிமை. அந்தக் கூட்டு உரிமை பிரிவினைவாதமும் அல்ல. ஆகவே இந்தக் கூட்டு உரிமையை ஒரு தேசமாக நின்று வெளிப்படுத்துவதற்கான மூலோபாயம் மாத்திரமே தமிழர்களுக்கான இன்றைய தேவை. எனவே 1979 ஆண்டு கொழும்பில் இருந்த சீனத் தூதுவர், அரசியல் அறிவியல்துறைப் பேராசிரியர் வில்சனிடம் கூறிய கதையும் இந்திய இராஜதந்திரத்துக்குத் தெரியாததல்ல.
அ.நிக்ஸன்