நுவரெலியாவில் போதைப்பொருள் கையிருப்பு: விசாரணைகள் முன்னெடுப்பு!
நுவரெலியாவில் வீடொன்றில் போதைப்பொருள் கையிருப்புகள் உள்ளதாக வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பில் விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் F.U.வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (22.10.2025) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைகள் தீவிரம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் பல இடங்கள் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றன. அவற்றுள், கந்தானை மற்றும் மித்தெனிய போன்ற இடங்களும் உள்ளடங்குகின்றன.
எனினும், நுவரெலியாவில் உள்ளதாக கூறப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பில் எமக்கு எந்தவித தகவல்களையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
நுவரெலியாவில் போதைப்பொருள் கையிருப்பு உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
விசாரணைகள் சரியான முறையில் நிறைவு பெறும் வரையில், தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் வரையில் எந்தவொரு தகவலையும் வெளியிட முடியாது. ” என தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொழிற்சாலை
கடந்த தினங்களில் மித்தெனியவில் பாரியளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த தகவல் தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் வெளிவராத நிலையில், காவல்துறை ஊடகப் பேச்சாளர் இவ்வாறு பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
