இரசாயன உரம் தொடர்பில் வெளிவந்த தகவல் - விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம்
அடுத்த வருடம் மார்ச் மாதமே இரசாயன உரங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என உர இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுஜீவ வலிசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
எனினும் உரத்தை இறக்குமதி செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும் எனவும் அவர் கூறினார். அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தற்போது நாட்டில் பெரும்போக நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்குத் தேவையான இரசாயன உரத்தை வழங்குமாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
எனினும் அடுத்த வருடம் மார்ச் மாதமே குறித்த உரங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
