தமிழர் பகுதியில் இழைக்கப்படும் அநீதிகள்: அரசியல்வாதிகளை போட்டுத்தாக்கிய மாணவர்கள்
உலகெங்கிலும் பலமொழி பல கலாச்சாரங்களை பின்பற்றி மக்கள் தம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்
அந்தவகையில், இந்து சமுத்திரத்தின் மத்தியிலே இயற்கை வளம் கொழிக்கும் அழகிய தீவான இலங்கையில் மும்மொழியும், நால்மதமும் கடைப்பிடிக்கும் மக்கள் வாழ்கிறார்கள்.
இங்கே எப்பொழுதும் பேசுபொருளாக இருக்கும் இனங்கள் இரண்டு ஒன்று சிங்கள இனத்தவர் இன்னொன்று தமிழினத்தினர்.
ஈழத்தமிழன் உலகெங்கும் பரந்து பெயர் புகழ் நிலம் சொத்து என்று வாழ்ந்தாலும் தனக்கு உயிரளித்த தாய்மண்ணில் தனக்கென்ற அடையாளமற்று நிலைத்திருப்பையும் இழக்கும் அபாயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்
தமிழினம் தன் வாழ்வுக்கும் நிலைத்திருப்பிற்கும் பெரும்பான்மை அரசினரிடம் சொற்சமர், ஆயுதமேந்திச்சமர்,அரசியல் ரீதியில் சமர் புரிந்திருந்தாலும் இன்னமும் முறையான விடுதலை காணவில்லை என்பது கண்கூடு.
வாழும் நிலங்கள் சூறையாடப்படுவதும், தமிழர் பிரதேச மலைகளில் புத்தர் தியானம் கொள்ள வந்தமர்வதும் தமிழர் நிலைத்திருப்பிற்கு கேள்விக்குறி என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்ல முடியும்.
இப்படி தமிழர் பிரதேசங்களில் இழைக்கப்படும் அநீதிகளிற்கு அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன? அது தமிழருக்கு பெற்றுத்தரும் தீர்வு தான் என்ன?
இந்த கேள்விகளுக்கு சமூகத்தில் ஆயிரம் சிந்தனை போக்கும் ஏராளம் பதில்களும் இங்கே சுற்றி உலாவும்.
இதற்கு வளர்ந்து வரும் இளைய சமூகம் என்னதான் எண்ணுகிறது என்பது நமக்கு தெரிய வேண்டும் அல்லவா?
ஏனென்றால் நாளைய நாட்டின் தலைவர்கள் அவர்கள் தானே?
தமிழர் பிரதேசங்களில் இழைக்கப்படும் அநீதிகளிற்கு அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வினைத்திறனானவயா? இல்லையா? என்ற விவாத தலைப்பிற்கு.
சொல் எனும் கணை கொண்டு போர் தொடுக்கும் எம் இளம் மாணவப்புயல்களின் சொற்போரினை, ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் "சொல்லாயுதம்" நிகழ்ச்சியில் காண்போம்.
அரசியல் விழிப்புணர்வு எங்கிருந்து எழ வேண்டுமோ அங்கே விதையிட்டு முளைக்க விட்டு வளரும் விருட்சத்தின் விழுதுகளிலேனும் விடுதலையை காண்போம்.