18 வயதிற்குட்பட்ட ஒரு குழுவினருக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கியதால் எழுந்தது சர்ச்சை!
சிலாபம் - கொக்காவில அரச பாடசாலையில் நிறுவப்பட்ட தடுப்பூசி மையத்தில் 12 - 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சிறப்பு ஆலோசகர் டாக்டர் தினுஷா பெர்னாண்டோ கூறினார்.
குறித்த தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற வந்த 60 வயதிற்கு மேற்பட்ட ஏராளமான மக்களுக்கு நேற்று தடுப்பூசி கிடைக்காமல் போயுள்ளது.
இந்த தடுப்பூசியை வழங்கும் இடத்தில் பாதுகாப்பு கடமையில் உள்ளவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தங்களுக்கு மிக நெருக்கமான நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொடுத்தமையே இதற்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதேவேளை, குறித்த தடுப்பூசி மையத்தில் ஒரு மருத்துவரின் பிள்ளைகளுக்கும் பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிலாபம் சுகாதார அதிகாரி கூறினார்.
மேலும், குடும்ப சுகாதார சேவைகள் பிரிவின் பெண் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் குழு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, 18 வயதிற்குட்பட்ட ஒரு குழுவினருக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட்ட சம்பவத்தில் ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவச்சி இடம்மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.