இலங்கையின் கல்வித்துறையில் கனடாவின் பங்களிப்பு
இலங்கையில் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தகவல் மற்றும் பயிற்சி அளிப்பதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பங்களிப்பைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன்போது, இலங்கையில் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அதிபர்கள், இலங்கை கல்விப் பல்கலைக்கழகத்தின் கல்வி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கால திட்டம்
அத்தோடு, அவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கலந்துரையாடலில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பதில் தலைவர் பேராசிரியர் கேஜ் அவெரில், சர்வதேச மற்றும் ஆளுநர்கள் சபையின் உறுப்பினர் பேராசிரியர் அன்னா கிண்ட்லர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி ஃபாங் வாங் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன் கல்வி அமைச்சின் ஆலோசகரும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |