இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் - தமிழர் தாயகத்தில் மாபெரும் எதிர்ப்பு போராட்டங்கள் (படங்கள்)
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதேநேரம் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம் 2000 ஆவது நாட்களை கடந்த நிலையில் அங்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது 2000 நாட்களை கடந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்றைய தினம் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு நகரில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தகளும் தமது கடைகளை மூடி காலை முதல் நண்பகல் 12 மணிவரை போட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றிலிலும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினம் தினத்தை முன்னிட்டு இன்று காலை போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய அலுவலகம் முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் அமைதி வழிப் போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் இணைந்து அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னார் பிரதான சுற்று வட்டம் வரை ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.
வவுனியா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்ட பேரணியானது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா நகரின் ஊடாக பழையபேருந்து நிலையத்தை அடைந்திருந்ததுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களை கண்டறிய பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணியானது பேருந்து நிலையம் ஊடாக தந்தை செல்வா சதுக்கம் வரை சென்று நிறைவடைந்தது.
திருகோணமலை
திருகோணமலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் அமைதியான முறையில் போரணியாகச் சென்று அருட்தந்தை டன்ஸ்டன் பிரட்ரிக்கிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.
அம்பாறை
அம்பாறையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி பேரணியில் ஈடுபட்டனர்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
