கஞ்சிபானி இம்ரானை தேடி மலேசியாவில் களமிறங்கிய இன்டர்போல்!
பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபருமான கஞ்சிபானி இம்ரானை எவ்வாறாயினும் கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை, இன்டர்போல் மற்றும் இலங்கையின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தலைமையிலான விசேட குழுவினர் இணைந்து பாரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சிபானி இம்ரான் சர்வதேச குற்றக்கும்பல் தலைவராக மலேசிய காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் அனைத்து பாதைகளும் மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆனந்த விஜேபால முழுமையான ஒத்துழைப்பு
கஞ்சிபானி இம்ரானுக்கு மலேசியாவில் உள்ள தொடர்புகள் மற்றும் அவருடன் தொடர்புடைய குழு உறுப்பினர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மலேசிய காவல்துறைகாவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உதவியாளர் எனக் கூறப்படும் ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களிடம் மலேசிய காவல்துறையும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவும் நீண்ட நேர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைகளின் மூலம் கஞ்சிபானி இம்ரான் தொடர்பிலும் அவரது சர்வதேச தொடர்புகள் குறித்தும் முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழுமையான ஆதரவு உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பும் இந்த நடவடிக்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி, கஞ்சிபானி இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.