ISIS அமைப்புகளுக்கு பங்களித்த 15 இலங்கையர்கள்: தீவிரமடையும் விசாரணை!
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்புகளை இலங்கையில் பரப்புவதற்கு பங்களித்த மற்றும் அதற்கு நிதி உதவிகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 15 சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் நேற்று (17.10.2025) 15 முறைப்பாடுகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவு தாக்கல் செய்திருந்தது.
குறித்த சந்தேகநபர்களுள், ஒரு சிலர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
நிதி உதவி
அல்கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்புகளின் பிரசங்கங்களில் பங்கேற்பது மற்றும் குறித்த அமைப்புகளுக்கு நிதி வழங்குவது தொடர்பில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவு மூலம் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட மேலதிக நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குறித்த பிரிவுக்கு உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
