இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 12 வயது சிறுவன் : வெளியான காரணம்
புதிய இணைப்பு
வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த 13ஆம் திகதி மதியம் கடைக்குச் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் குழு ஒன்று அருகிலுள்ள 3 மாடி வீட்டின் இரும்பு கதவை தட்டிவிட்டு ஓடிய சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.
அந்த நேரத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த, குறித்த வீட்டில் வசிக்கும் ஒரு இளைஞன், சிறுவனை பிடித்து வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்துச் செல்வதும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பயமுறுத்துவதற்காக கதவைப் பூட்டிய அந்த இளைஞன், பின்னர் குளியலறைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சிறுவன் வீட்டின் மூன்றாவது மாடிக்குச் சென்று, பக்கத்து வீட்டின் கூரையில் குதித்து, பின்னர் வீதிக்கு குதித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுமார் 10 அடி உயரத்தில் இருந்து வீதிக்கு குதித்த சிறுவன் பலத்த காயமடைந்தள்ளதாகவும் சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், குழந்தையை வீட்டிற்குள் சுமந்து சென்ற இளைஞன் தனது தந்தையின் தண்டனையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், குறித்த இளைஞனை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
மாடியில் இருந்து குதித்த 12 வயது சிறுவன் : விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பு (Colombo) – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைத் தேடிவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், “நேற்று முன்தினம் (13) குறித்த சிறுவன், ஏனைய சிறார்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது அருகிலிருந்த வீடொன்றின் வாயிற்கதவைப் பலமாகத் தட்டியதை அடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் சிறுவனைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று, வீட்டின் மாடியில் உள்ள அறையொன்றில் அடைத்துக் கதவைப் பூட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுவன் குறித்த அறையின் ஜன்னல் வழியாகக் குதித்ததை அடுத்து, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், குறித்த சிறுவனைச் சிறைப்படுத்த உதவிய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை வீட்டின் உரிமையாளர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
