இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணையக தலைவருக்கு எதிரான முறைப்பாடு! விசாரணையில் வெளியான அறிக்கை
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனரல் ரங்க திசாநாயக்க, சட்டத்திற்கு முழுமையாக இணங்கியே கடந்த 2014 ஆம் ஆண்டு தனது குழந்தையை கொழும்பு றோயல் கல்லூரியில் சேர்த்தார் என்பதை ஆணைக்குழுவின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் தனது குழந்தை முறைகேடாக சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெனரல் ரங்க திசாநாயக்கவுக்கு எதிராக பெறப்பட்ட முறைப்பாடு மீதான விசாரணை நிறைவடைந்து விட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆணைக்குழுவின் ஊடகப்பிரிவு அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
அரசியல் தலையீடு எதுவும் இல்லை
அதன்படி, ரங்க திசாநாயக்கவின் குழந்தையை பாடசாலையில் சேர்க்கும் செயல்பாட்டில் நிறுவன நடைமுறைகளில் எந்த முறைகேடும், பாரபட்சமான அல்லது சட்டவிரோதமான செயல் அல்லது அரசியல் தலையீடு எதுவும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களின் அறிவுறுத்தல்களின்படி, இவ்விடயம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெனரலுக்கு எதிராகப் பெறப்பட்ட முறைப்பாடு என்பதால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைவாக விசாரிக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, இவ்விடயடம் தொடர்புடைய விசாரணையின் போது, கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்தக் குழந்தை குறித்த பாடசாலையில் சேர்க்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
