பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் முறைகேடுகள் : விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்
பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நியமித்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபையின் தவிசாளருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கந்தையா அரியநாயகம் என்பவரை ஆளுநர் நியமித்துள்ளார்.
குறிப்பாக சபையின் விதிகளுக்கு மாறாக தன்னிச்சையாகச் செயற்படுதல், நிர்வாக ரீதியிலான முறைகேடுகள் மற்றும் நகர சபையின் ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களைப் புறக்கணித்து முடிவெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
வெளியான வர்த்தமானி
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக எழுந்த முறைப்பாடுகளை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதுடன் இதற்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அடுத்த 3 மாத காலத்திற்குள் தனது விசாரணைகளை நிறைவு செய்து, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகர சபை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவிசாளருக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


