முன்னாள் அமைச்சரின் வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (Vijith Vijithamuni Soysa) பயன்படுத்திய ஜீப் ரக வாகனம் தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஜீப் ரக வாகனம் கடந்த மாதம் ஹப்புத்தளை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமா என்பதை கண்டறிவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பண்டாரவளை (Bandarawela) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு பிரிவில் முன்னிலை
இதற்கமைய, இந்த விடயம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த விஜித் விஜயமுனி சொய்சா நேற்று முன்தினம் (14) வலான ஊழல் தடுப்பு பிரிவில் முன்னிலையானார்.
இரண்டு சட்டத்தரணிகளுடன் வலானை ஊழல் தடுப்பு பிரிவிற்கு சென்ற அவர், வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் திடீரென சுகவீனமுற்றதாக கூறி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பிறிதொரு திகதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |