முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு கொலை மிரட்டல் - தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வு திணைக்களம்
முன்னாள் கடற்படைத்தளபதியும் தற்போதைய வடமேற்கு மாகாண ஆளுநருமான அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னகொடவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வசந்த கரன்னாகொட காவல்துறை மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், காவல்துறை அதிபர் விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
குருநாகல் ஏரி வட்டத்திலும், வடமேற்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லமான குருநாகல் நகரத்திலும் வசிக்கும் கரன்னகொடவிற்கே இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணொளி காட்சிகள்
குருநாகல் ஏரி வட்டத்தில் அமைந்துள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான காணொளி காட்சிகள் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அடுத்துள்ள குருநாகல் பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி காட்சிகள் மற்றும் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஊழியர்கள் வசிக்கும் பகுதி, உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் பகுதி மற்றும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள அவரது பாதுகாப்பு வான் ஆகியவை தெளிவாக இந்த காணொளியில் பதிவாகியுள்ளன.
விடுதலைப் புலிகளுடனான போரை வெல்ல
குருநாகல் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் வெளியாட்கள் நுழைய முடியாத வகையில் காவல்துறை பாதுகாப்பு இருந்தும், அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அறையில் இருந்து ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளி பதிவு செய்ய அனுமதித்தமை பாரிய தவறு என வடமேற்கு ஆளுநர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான போரை வெல்ல தரையிலிருந்து போராடிய சிறிலங்கா இராணுவத்திற்கு கடலில் இருந்து பூரண ஆதரவை வழங்கிய சிறிலங்கா கடற்படைக்கு அப்போது கடற்படைத் தளபதியாக வசந்த கரன்னாகொட தலைமை தாங்கினார் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
கரன்னாகொட தொடர்பான காணொளிகளை எந்தவொரு குழுவும் கையகப்படுத்துவது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாகவே கருதப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லக்ஸ்மன் கதிரகாமர் மீதான துப்பாக்கிசூட்டிற்கு சமம்
இந்த காணொளிகளை எடுப்பது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிரகாமர் மீதான துப்பாக்கிசூட்டிற்கு சமம் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குருநாகல் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்க ஆளுநரிடம் இந்த காணொளிகள் தாம் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இல்லாத போது யாரோ எடுத்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அறிவித்திருந்த போதிலும், விசாரணை மந்தகதியில் காணப்படுவதால் இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கரன்னாகொட காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆளுநருக்கு மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதில் அரசியல் தலையீடு உள்ளதா என ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான பல தொலைபேசி அழைப்புகள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை மிரட்டலை அடுத்து ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
