கோட்டா கோ கம தாக்குதல் - துருவப்படும் பிரதி காவல்துறை மா அதிபரின் கைபேசி
ஆரம்பமானது விசாரணை
கடந்த மே 9 அன்று அலரிமாளிகைக்கு முன்பாக நடைபெற்ற மைனா கோ கம போராட்டம் மற்றும் காலிமுகத்திடலுக்கு முன்பாக நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விசாரணைகள் தொடர்பில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்கவும், தாக்குதல் நடத்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையினர் தவறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களை தடுக்குமாறு அரச தலைவர் உத்தரவிட்ட போதிலும் அரச தலைவரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டாம் என காவல்துறை மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தமக்கு அறிவித்ததாக தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் குழு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளனர்.
துருவப்படும் தொலைபேசி அழைப்புகள்
இந்த வாக்குமூலத்தை கவனத்தில் கொண்ட புலனாய்வாளர்கள் தேசபந்து தென்னகோனின் கையடக்கத் தொலைபேசியைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் உள்வரும் அழைப்புகள் தாக்குதலைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறியும் பணியில் சிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
