ரி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி
ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்தி பிடித்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் நேற்றையதினம்(26) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றது.
உலக சாதனை
262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.
பஞ்சாப் அணியின் இந்த வெற்றிக்கு ஜோனி பேர்ஸ்டோவின் ஆட்டம் இழக்காத சதம், ப்ரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன முக்கிய காரணங்களாகும்.
இந்த வெற்றியின் மூலம் சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற உலக சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
அதிக சிக்ஸர்கள்
இதற்கு முன்னர் கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 259 ஓட்டங்களே தென் ஆபிரிக்காவினால் கடக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி இலக்காக இருந்தது.
மேலும், அதிகமான சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற சாதனையும் நேற்றைய தினம் படைக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் - மும்பை ஐபிஎல் போட்டியிலும், பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐபிஎல் போட்டியிலும் இந்த வருடம் தலா 38 சிக்ஸ்கள் மொத்தமாக குவிக்கப்பட்டதே போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிக சிக்ஸர்களுக்கான சாதனையாக இதற்கு முன்னர் இருந்தது.
மேலும், இப் போட்டியில் இரண்டு அணிகளிலும் துடுப்பெடுத்தாடிய 11 பேரில் ஒருவரைத் தவிர மற்றைய எல்லோரும் சிக்ஸ்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |