இஸ்ரேலுக்கு பேரிடியாக அமையும் கண்டுபிடிப்பு: ஈரான் களமிறக்கிய அதிநவீன ஏவுகணை
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அதிநவீன ஏவுகணையை ஈரான் (Iran) கடற்படை நேற்று (09) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணைக்கு அபு மஹதி (Abu Mahdi) என பெயரிடப்பட்டுள்ளதுடன், இது நீண்ட தூர கப்பல் ஏவுகணை ஒன்றாகும்.
விசேட அம்சம்
இந்த ஏவுகணையின் மூலம் 1,000 கிமீ தூரம் வரை கப்பல் எதிர்ப்பு மற்றும் தரைவழி தாக்குதல் ஆகிய இரண்டையும் செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படையின் ஒரு பகுதியான இந்த ஏவுகணைகள், ரேடார்-தவிர்க்கும் திறன் மற்றும் நாசகார கப்பல்கள் உட்பட பெரிய கடற்படை கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட போர்க்கப்பல்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, ஏவுகணையில் விசேடமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதனை தொலைவில் இருந்தே இயக்க முடியும் என கூறப்படுகிறது.
ஈரானின் நிலைப்பாடு
இது தொடர்பில், அந்நாட்டு இராணுவ தளபதி ஹுசைன் சலாமி (Hossein Salami) கூறுகையில், தற்போதைய உலகத்தில் சரணடையவேண்டும், அல்லது நம்மை நாமே பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற இரு நிலைப்பாடுகள் மட்டுமே உள்ளன. இரண்டும் இடைப்பட்ட நிலைப்பாடு இருக்கமுடியாது.
எனவே, இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈரானுக்கு இந்த ஏவுகணை இன்னும் பலம் சோ்க்கும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |