ஈரானின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்! பாகிஸ்தான் அரசு எடுத்த திடீர் முடிவு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அந்த நாட்டுக்கு தனது தூதரை பாகிஸ்தான் திரும்பப் பெற்றுள்ளது.
அத்துடன், இரு நாட்டு தலைவா்கள் மேற்கொள்ளவிருந்த பரஸ்பர பயணத் திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பு
ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அதில் அமைப்பின் 2 நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்; சிறுமிகள் 3 போ் காயமடைந்தனா்.
‘பாகிஸ்தான் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் நாட்டின் இறையாண்மை, சா்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. சாசன விதிகளை ஈரான் மீறியுள்ளது’ என்று பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் தரப்பின் விளக்கம்
இந்தநிலையில், ‘ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதக் குழுவின் எல்லை கடந்த பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஈரானுக்கு எதிரான அந்த அமைப்பின் செயல்பாடுகள் தொடா்ந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் அண்மையில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, ஈராக், சிரியாவிலும் இதேபோல் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |