சர்வதேச நாடுகளை விசாரணைக்குட்படுத்தும் ஈரான்: தீவிரமடையும் பதற்ற நிலை
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களை ஈரான் வெளிவிவகார அமைச்சில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது என குறித்த தரப்பினர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வினவுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தாக்குதல்
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக ஈரான் இஸ்ரேல் மீது வான்வழித்தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதலின் போது, அமெரிக்க மற்றும் பிரித்தானியாவின் உதவியுடன் ஈரானின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த பின்னணியில், இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட வான்வழித்தாக்குதல் தொடர்பில் சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
இரட்டை நிலைப்பாடு
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் ஈரானின் தாக்குதலை வன்மையாக கண்டித்திருந்தன.
இந்த நிலையில், குறித்த நாடுகள் இரட்டை நிலைப்பாடுடன் செயற்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்திய போது, அதனை குறித்த மூன்று நாடுகளும் கண்டித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
வலுவான பதிலடி
இதேவேளை, ஈரான் மீது பதில் தாக்குதல்களை மேற்கொள்ள இஸ்ரேல் முயற்சிக்கும் பட்சத்தில், மேலும் வலுவான பதிலடியை இஸ்ரேல் எதிர்நோக்க நேரிடுமென ஈரான் எச்சரித்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிடும் பட்சத்தில் அவர்களும் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடுமென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்
ஈரானின் தாக்குதல் தொடர்பிலும், இரண்டு நாடுகளுக்கிடையிலான தாக்குதல்கள் காரணமாக தீவிரமடையும் பதற்ற நிலை குறித்து ஆராய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இன்று மாலை ஜி7 மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |