ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்...! கசிந்த உளவுத் தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை தரவுகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், அவர் கடுமையான மருத்துவ நிலையில் இருப்பதாகவும், ஈரானிய ஆட்சியின் எந்தவொரு முடிவெடுக்கும் செயல்பாடுகளிலும் அவரால் ஈடுபட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கல்லறை
தெஹ்ரானுக்குத் தெற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோம் நகரம், ஷியா இஸ்லாமியர்களின் மதத் தலைநகராகக் கருதப்படும் நிலையில் அந்நாட்டின் உச்ச தலைவரின் இருப்பிடம் இவ்வாறு வெளிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், கோம் நகரில் அடக்கம் செய்யத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்யும் வகையில் ஒரு பெரிய கல்லறை (Mausoleum) உருவாக்கப்பட்டு வருவதாக உளவு அமைப்புகள் கருதுகின்றன.
இந்தநிலையில், மொஜ்தபா கமேனியின் உடல்நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போர் தொடங்கிய முதல் நாளிலேயே தனது குடும்பத்தினருடன் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததை ஈரான் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது.
செயற்கை நுண்ணறிவு
மார்ச் தொடக்கத்தில் அவர் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.
ஈரான் அரசு அண்மையில் அவர் போர் அறையில் (War Room) அமர்ந்து இஸ்ரேலிய வரைபடங்களை ஆய்வு செய்வது போன்ற காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இருப்பினும், அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான காணொளி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஈரானிய அதிகாரிகள் அவர் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தி வருவதாகக் கூறினாலும், அவர் கோமா நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனோ அல்லது தெஹ்ரானோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றாலும், ஈரானின் தலைமைத்துவத்தில் நிலவும் இந்த மர்மம் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |