இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்திய ஈரான்
ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான கதாம் அல்-அன்பியா மத்திய தலைமையகம், இஸ்ரேல் மீதான தற்போதைய தாக்குதல்கள் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளது.
ஆனால், தெற்கு லெபனான் உட்பட இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்தால், ஈரான் முன்பை விடக் கடுமையாகவும் வலுவாகவும் பதிலடி கொடுக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இராணுவ நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஈரானும் நேற்று இரவு முதல் இன்று வரையிலும் மாறி மாறித் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன.
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதை தடுக்கும் முயற்சி என்று கூறி, தெற்கு லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தரைவழி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அங்குள்ள இஸ்ரேலிய வீரர்கள் குழு மீது ஏவுகணைகளை ஏவியதாக ஹிஸ்புல்லா இன்று காலை தெரிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) உரிமை கோரியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, ஈரானிய பெட்ரோ கெமிக்கல் ஆலை ஒன்றில் "பல இலக்குகள்" மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் உள்ள "மூலோபாய பாதுகாப்பு அமைப்புகள்" மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை நிறைவு செய்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது.
இஸ்ரேலிய விமானத் தளங்கள்
அதே நேரத்தில், இஸ்ரேலில் உள்ள இரண்டு இஸ்ரேலிய விமானத் தளங்களைத் தாக்கியதாக ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என்றும், பதற்றம் அதிகரிப்பதன் விளைவுகள் அமெரிக்காவையும் பாதிக்கும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகிறார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான குறுஞ்செய்திப் பரிமாற்றம் "நிறுத்தப்படவில்லை" என்றும் அவர் கூறினார், ஆனால் அந்தப் பரிமாற்றம் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறதா இல்லையா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
இஸ்ரேலும் ஈரானும் "உடனடி போர் நிறுத்தம்" செய்ய விரும்புவதாகவும், விஷயங்கள் விரைவாக நகர வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று முன்னதாகக் கூறினார்.
ஈரானும் இஸ்ரேலும் உடனடியாக துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் என்றும் அவர் முன்னதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 20 மணி நேரம் முன்