அமெரிக்கா - ஈரான் போர் அச்சுறுத்தல்...! கத்தார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஈரான், அமெரிக்க மோதலானது பிராந்திய நாடுகள் இடையே மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தும் என கத்தார் எச்சரித்துள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் இன்னமும் தொடர்கின்றது.
அந்நாட்டின் மீதான பொருளாதார தடை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் சூழலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
பொருளாதார தடை
இந்தநிலையில், போராடுவோர் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை ஜனநாயகத்தை கண்டித்து அந்நாடு மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார்.
இதனடிப்படையில் இராணுவ ரீதியான நடவடிக்கைக்கு தயாராவது குறித்து ஆலோசித்து வரும் அவர், ஈரானுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகளுக்கு 25 சதவீதம் உடனடி வரி விதிப்பை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த மோதல் போக்கிற்கு கத்தார் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜெத் அல் அன்சாரி கருத்து வெளியிட்டுள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தை
மேலும் தெரிவித்துள்ள அவர், “போர் பதற்ற நடவடிக்கைகள் பொதுவாகவே மோசமான சூழல்களை உருவாக்கும்.
எந்த ஒரு மோதல் வெடித்தாலும் அது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பேரழிவுகளை ஏற்படுத்தும்.

எனவே அதை முடிந்தளவு தவிர்க்க விரும்புகின்றோம்.
தூதரக ரீதியில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் மற்றும் அதில் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுடனும் ராஜதந்திர தீர்வை காண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |