மொட்டுவின் இளம் எம்.பிக்கள் இருவரின் தீவிர ஆதரவாளரான'இரத்மலானே சைமா' :விசாரணையில் அம்பலம்
மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் 'கஞ்சிபானி இம்ரானின்' நெருங்கிய சகாவான 41 வயதான 'இரத்மலானே சைமா' என்ற தனுஷ்க கோசல, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளம் எம்.பி.க்களின் பலமான ஆதரவாளராக இருந்துள்ளமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பேராதனை மற்றும் கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்த அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல பாரிய குற்றச்சாட்டுகள்
இரத்மலானை மற்றும் பேராதனை எடந்துவ பிரதேசங்களில் வசித்து வரும் இவருக்கு எதிராக பல பாரிய குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் மீது 2016 ஓகஸ்ட் மாதம் துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் மற்றொரு கொலைக்கு உதவியது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு நபர் ஒருவரை கடத்தி தாக்கிய சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டும் உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வானை கடத்திச் சென்று ஒருவரை கத்தியால் குத்தி 15,000 ரூபா பெறுமதியான பதக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தவிர்த்து வந்தார்.
கொலை மிரட்டல் காரணமாக 2017ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற அவர், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தவிர்த்து வந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் காவல்துறை பரிசோதகர் வீரரத்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |