அரசாங்கம் மைத்திரியை பாதுகாக்கின்றதா? ஆளும் தரப்பிடம் பகிரங்க கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலப் பகுதியில் நாட்டின் அரச தலைவராகவும் படைத் தளபதியாகவும் செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவிடம் ஏன் ஓர் வாக்குமூலம் கூட பதியவில்லை என அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா (Sanath Nishantha Pereira) கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹாகும்புக்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான செயற்பாடுகளினால் அரசாங்கம் மைத்திரியை பாதுகாக்கின்றதா என்ற சந்தேகம் கத்தோலிக்க மக்கள் மத்தியில் எழுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரச தலைவர் மீதும் பிரதமர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்களை மூடி மறைத்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச தலைவரும் பிரதமரும் தங்களது மனச்சாட்சிகளிடம் இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டுமென அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
