ஜெனீவாவில் இலங்கை அரசின் இனவழிப்பு ஊக்குவிக்கப்படுகிறதா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 54ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசு மீண்டும் தனது பொறுப்புக் கூறல் மறுப்பு முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மேற்குலக நண்பர் என வர்ணிக்கப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசில் இருந்து பொறுப்புக் கூறல் குறித்த மறுப்பு வருவது வியப்பான விடயம் இல்லை என்ற போதும், இன்னமும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத் தமிழர்களின் விடயம் கையாளப்படுகின்ற விதமே சிறிலங்கா அரசு ஈழத்தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளும் இனவழிப்பை ஊக்குவிக்கும் விதமாகவே அமைவதே அதிர்ச்சியானது.
உண்மை, நீதி, தீர்வு இல்லை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 54ஆவது கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் நாளன்று ஆரம்பமாகியது. ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையில் இடம்பெறும் பேரவையின் கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்களின் இலங்கை தொடர்பான அறிக்கை உறுப்பு நாடுகளின் பார்வைக்குமானவை. அத்துடன் குறித்த அறிக்கை தொடர்பான ஊடாடும் கலந்துரையாடல்கள் கூட்டத்தொடரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை : வோல்கர் டர்க்
கடந்த காலத்தில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அறிக்கை தொடர்பில் மீள் வலியுறுத்தலும் இந்த அமர்வில் இலக்காயிருந்தது. பேரவையில் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையும், அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் உரையும் இடம்பெற்றன. மனித உரிமைப் பேரவையின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது செம்மையாக்கப்படாத அறிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் இக் கூட்டத் தொடரில் புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாத போதும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்களின் அறிக்கை இலங்கை அரசுக்கு அழுத்தம் ஏற்படுத்தும் விதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது.
இதேவேளை போர் முடிந்து 14 வருடங்கள் ஆகின்ற போதும், பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதி, தீர்வு என்பன கிடைக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது வருடாந்திர அறிக்கையில் கூறியிருந்தார்.
நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தோல்வி
பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை தொடர்ந்தும் தவறி வருவதாகவும், போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்பு கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தனது அறிக்கையில் கூறினார்.
அத்துடன் ஏப்ரல் 21 ஈஸ்டர் படுகொலை குறித்த இலங்கையின் சர்ச்சைகளையும், சிறிலங்கா அரசு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி குறித்தும் அவர் தன்னுடைய பார்வையை செலுத்தி இருந்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை சார்ந்த குற்றச் செயல்களுக்கு இணையாகவே அல்லது அடுத்த நிலையில் முக்கியத்துவமாகவே இந்த விடயங்களையும் ஐ.நா ஆணையாளர் முன்வைப்பதைக் குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.
மனித உரிமைப் பேரவையின் கவனம், இலங்கை அரசின் தமிழர் விரோதப் போக்குகள் குறித்த கூர்மையை இன்னமும் உணராமல் அல்லது பதிவு செய்யாமல் இருக்கும் தருணத்தில் மனித உரிமை அமைப்புக்களின் பார்வைகளும் கருத்துக்களும் முக்கியம் பெற்றுள்ளன.
அந்த வகைளில் இலங்கையில் அரசியல் ரீதியான தன்முனைப்பின்மை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை என்பவற்றின் காரணமாக உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பது கவனத்திற்கும் விவாதத்திற்கும் உரியதாகும்.
தோல்வியில் ஐ.நா தீர்மானங்கள்
மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, பிரான்ஸ் தமிழர்கள் அமைப்பு, உலகளாவிய எவான்ஜலிகல் கூட்டணி முதலிய மனித உரிமை அமைப்புக்கள், இலங்கை குறித்தும் இலங்கையில் நீடிக்கும் இன ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்தும் கூர்மையான அதே வேளை கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை பதிவு செய்துள்ளன.
வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் மத தலங்கள்மீதான ஒடுக்குமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீடிக்கும் அசமந்தம், முஸ்லீம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சிறிலங்கா அரசின் பொறுப்புக் கூறல் விலகல் மற்றும் அசமந்தப் போக்கு என்பன பற்றி குறித்த அமைப்புக்கள் தமது ஆட்பேசபனைகளை பேரவையில் முன்வைத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 54ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசு தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான திருப்தி தன்மை UNHRC வெரிட்டே ரிசர்ச் மொனிடரில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 'மோசமான' அல்லது 'முன்னேற்றமற்ற' நிலையில் 60% க்கும் அதிகமான உறுதிமொழிகளின் நிலை இருப்பதை மொனிடரில் பதிவு செய்யப்பட்டு காண்பிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அவற்றின் திருப்தித் தன்மைகளும் அங்கு பதிவு செய்யப்பட்டன. அத்துடன் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாத்தில் 40/1 தீர்மானத்தில் இருந்து விலகியதுடன், அதற்கு முந்தைய 2017ஆம் ஆண்டு முதலான அனைத்துத் தீர்மானங்களில் இருந்தும் விலகியிருந்தது.
கடந்த செப்டம்பர் தீர்மானம்
இதேவேளை கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாளன்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் 51/1 என்ற தீர்மானத்தின் கீழ் சிறிலங்காவுக்கு மீண்டும் இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது.
இத் தீர்மானத்தை ஆதரித்து 20 நாடுகள் வாக்களித்த, அதேவேளை தீர்மானத்திற்கு எதிராக ஏழு நாடுகளும் இதன் போது 20 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்திருந்தன.
குறிப்பாக இலங்கையில் 2015இன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் சிறிலங்கா அரச தரப்புக்கு கால அவகாசம் அளித்தலின் ஊடாக 2009இல் இடம்பெற்ற இனப்படுகொலை சார்ந்த குற்றச் செயல்களுக்கான நீதிக்கு கால தாமதத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையும் தொடர்ந்து துணை நின்று வருகின்றது.
கடந்த செப்டம்பர் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடருக்கும் இந்த ஆண்டு நடைபெறுகின்ற கூட்டத் தொடருக்கும் இடையிலான காலத்தில் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தென்னிலங்கைப் பேரினவாதிகளின் அரசியல் பேச்சுக்கள் என்பவற்றை ஆராய்ந்தால், மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கையில் என்ன மதிப்பும் விளைவும் இருக்கின்றன? என்பதை அறிய முடிவதுடன், மனித உரிமைப் பேரவையும் இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு வாய்ப்பை அளிக்கிறதா? என்பது தொடர்பிலும் அறிந்துகொள்ள முடியும்.
இலங்கையின் தான்தோன்றித்தனம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் அரசு ஊமையாக இருந்து வருகின்றது. அதேவேளை தமிழர் நிலங்களை சுருட்டுதல், தமிழர் மத வழிபாட்டுத் தலங்களை ஒடுக்குதல் என்பன அசுர வேகத்தில் போராக முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய அமர்வின் போதும் சிறிலங்கா மீது ஐ.நா வலியுறுத்தியுள்ள பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது.
ஜெனீவா ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக 54ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை ‘சந்தேகத்திற்குரிய ஆணை’ என்று கூறி இருக்கிறார்.
அத்துடன் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46./1 -51./1 முதலிய தீர்மானங்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஜெனீவா ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக கூறியிருக்கிறார்.
மனித குல விரோதச் செயற்பாடுகள் குறித்து பன்னாட்டு நீதி அமைப்பு சார்ந்து பதில் சொல்லாது ஏமாற்றும் காலத்தை இழுத்தடிக்கும் இலங்கையின் அணுகுமுறை வெளிப்பாடு இதுவாகும். அத்துடன் இது சிறிலங்கா மீதான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கடந்த கால அணுகுமுறை மற்றும் அசமந்தப் போக்கினால் விளைந்த நிலைப்பாடும் பேச்சுமாகும்.
இத்தகைய சிறிலங்காவின் தான்தோன்றித்தனமான நிலைப்பாட்டிற்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையும் பொறுப்புக் கூற வேண்டும். அத்துடன் இத்தகைய நிலை நீள்வதே இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களை இன்னமும் இனவழிப்பு செய்யும் ஊக்குவிப்பு நிலைக்கான பின்னணியுமாகிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 14 September, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.