புத்த பகவான் போதித்தது இதைத்தானா...!
"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர்.
தான் கண்ட துறவறம்,நோயாளி, பிணம் மற்றும் துறவி என நான்கு காட்சிகளால் மனம் நொந்து அரண்மனை வாழ்க்கையை 29 ஆவது வயதில் துறந்து கடும் துறவறத்தை பூண்டவர் புத்தர்.
இலங்கையிலும் புத்த பகவானின் வழித்தோன்றல்கள் எனக்கூறி அவரின் வழியில் செல்வதாக தெரிவிக்கும் பிக்குகள் நடத்தும் கூத்துக்கள் சொல்லி மாளாதவை.
இலங்கை பௌத்தத்திற்குரிய நாடு என கூறும் இவர்கள் இன்று அந்த மதத்தை தழுவியுள்ள சிங்கள மக்களாலேயே வெறுத்து ஒதுக்கி கலைக்கப்படும் அளவிற்கு அருவருப்பான செயற்பாட்டை மேற்கொள்கின்றனர்.
சண்டித்தனமும், சட்டவிரோத செயற்பாடுகளும்தான் இவர்களின் நாளாந்த செயற்பாடுகளாக உள்ளன. விளைவு இன்று நாளாந்தம் நீதிமன்ற படியேறி இறங்குகின்றனர் இந்த பௌத்த துறவிகள்
அரண்மனை வாழ்க்கையை துறந்த புத்த பகவான் மரத்தடியிலேயே தனது துறவற வாழ்கைக்குரிய ஞானோதயத்தை பெற்றார்.
ஆனால் இலங்கையில் வாழும் பௌத்த துறவிகள் புத்தரின் பெயரால் அரண்மனை வாழ்க்கை அல்லவா வாழ்கின்றனர்.
தாம் சொல்வதுதான் சட்டம் என்றும் அதற்கு சிங்கள அரசாங்கம் கட்டுப்பட வேண்டுமெனவும் இறுமாப்புடன் கூறுகின்றனர்.
அதைச் செய்த தவறினால் அரச தலைவருக்கு சூனியம் வைக்கிறோம் பார் என்ற பெயரில் பொதுவெளியில் பொம்மை செய்து ஏதோ சித்து விளையாட்டெல்லாம் காட்டி தாம் பின்பற்றும் மதத்தையும் அந்த மதத்தை பக்திபூர்வமாக பின்பற்றும் மக்களையும் கேலிக்குள்ளாக்குகின்றனர்.
கெட்ட செயல்கள் எதிலும் ஈடுபடக்கூடாது என போதிக்கவேண்டிய இவர்களே அனைத்து கெட்ட செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஆன்மிகத்தை தேடி வெளிநாட்டு பயணம் செல்வதாக சொல்லி செல்பவர்கள் அங்கு பெண்களுடன் அடித்த கூத்துக்கள் சமுகவலைத்தளங்களில் வந்த படங்கள் மூலம் அவர்களின் அருவருப்பான நடத்தையை காட்டியது.
அதைவிடவும் தாய்நாட்டிற்கு திரும்பி வரும்போது காவியுடையுடன் போதைப்பொருளை கொண்டு வந்து பிடிபட்டமை பலரும் அறிந்த பரகசியம்.
மற்ற மதத்தவர்களையும் மற்ற இனத்தவர்களையும் கேலிப்பொருளாக்கி அவர்களின் இருப்பிடங்களை விட்டு துரத்துவது இவர்களின் வேலை
மட்டக்களப்பில் ஒருவர் இருந்தார். கோணேஸ்வரர் கோவிலுக்கு முன் புத்தர் சிலை, வடக்கில் திருக்கேதீஸ்வரத்திற்கு முன்னர் புத்தர் சிலை, குருந்தூர் மலையில், வெடுக்குநாறி மலையில் இப்போது யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் காணியில் அடாவடித்தனமாக அமைக்கப்பட்டு கம்பீரமாக எழுந்து நிற்கிறது புத்தர் கோவில்.
மதம் என்பது மக்களை நல்வழிப்படுதுவதே தவிர அந்த மக்களை சண்டியர் ஆக்குவதற்கு அல்ல. மதத்தின்மூலம் எத்தனையோ தீய செயல்களை செய்பவர்களையும் நல்வழிப்படுத்தலாம் என்பது வரலாறு.
ஆனால் இலங்கையில் அரசமதம் என்று சொல்லப்பட்டாலும் அது விலக்காகவே உள்ளது.
மதத்தை பரப்பும் பௌத்த துறவிகளே சண்டியர்களாகவும் சட்டத்தை மதிக்காதவர்களாகவும் இருக்கும் போது அவர்களை புத்தரின் வழித்தோன்றல்கள் என்று கைகூப்பி வணங்கும் மக்களும் அவர்களின் வழிதானே செல்வார்கள்
இந்த பௌத்த துறவிகளை கட்டப்படுத்த தலைமைப்பீடம் சரியாக இருந்தால் இவ்வளவு சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை.
அப்படியென்றால் அரண்மனை வாழ்க்கையிலிருந்து துறவற வாழ்க்கைக்கு சென்ற புத்தர் சண்டித்தனத்தையும் சட்டவிரோத செயற்பாடுகளையும் ஏனைய இனத்தவர்களின் சொத்துக்களை அபகரிப்பதையுமா உலகிற்கு போதித்தவர்….!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |