தனிச்சிறையில் இஷாரா செவ்வந்தியின் பரிதாப நிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தொடர்ந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் அவர் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தீவிர கண்காணிப்பின் கீழ் இஷாரா
வழமையாக கைதிகள் காலை 6 மணியளவில் சிறைக் கூண்டுகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மாலை 4 மணியளவில் மீண்டும் அறைகளுக்குள் அனுப்பப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு இந்த வழமையான நடைமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாரா காலை 6 மணியளவில் அவர் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்ட பின்னர் சுமார் 15 நிமிடங்களில் மீண்டும் தனிச் சிறையில் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவு வழங்குவதற்காகவும் சுமார் 15 நிமிடங்களுக்கு மாத்திரம் அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் மாலை 4 மணியளவில் இரவு உணவுக்காக மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காக அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், அந்த நேரத்திலும் சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட கண்காணிப்பின் கீழ் ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் எந்தவொரு விசேட சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |