ஜெரூசலேமில் ஐ.நா தலைமையகத்தை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்!
கிழக்கு ஜெரூசலேமில் செயல்பட்டு வந்த ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணிகள் அமைப்பின் (யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ.) தலைமையகத்தை இடித்து அகற்றும் செயற்பாட்டில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.
காசா பகுதி மற்றும் மேற்கு கரையில் நடைபெற்று வரும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை ஐக்கிய நாடுகள் அமைப்புகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்நிலையில், யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ. அமைப்பு ஹமாஸ் இயக்கத்திற்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் ஆதரவாக செயல்படுவதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.
புதிய சட்டங்கள்
அந்த அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்களை இஸ்ரேல் அரசு சமீபத்தில் நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

Image Credit: AP News
இச்சட்டத்தின் அடிப்படையிலேயே, இன்று (20.01) கிழக்கு ஜெரூசலேமில் உள்ள யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ. தலைமையகத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முற்றுகையிட்டன.
அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட பின்னர், வளாகத்திலுள்ள கட்டடங்களை புல்டோசர் மூலம் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளம்பியுள்ள எதிர்ப்பு
இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பையே நேரடியாக குறிவைக்கும் செயல் என்றும், இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் பல அதிகாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Image Credit: RTL Today
அதே நேரத்தில், ஹமாஸ் அமைப்பிற்கு உதவி வழங்கப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை மீண்டும் குற்றம்சாட்டி, புதிய சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் இதனை இஸ்ரேலின் வரலாற்றில் முக்கியமான நாள் என குறிப்பிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது இந்த கருத்துக்கு உலகளாவிய அளவில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |