நீண்ட போருக்கு தயாராகும் இஸ்ரேலியர்கள்
காசா மீதான போரானது நீண்டது மற்றும் கடினமான ஒன்றென இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.
ஆகையினால் நீண்ட போருக்கு இஸ்ரேலியர்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், இரண்டாம் கட்ட நடவடிக்கைகளையும் விரிவுபடுத்தியுள்ள நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
தரைவழி பிரவேசம்
தரைவழியாக பிரவேசித்துள்ள இஸ்ரேலிய படையினர், ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
காசாவின் வட பகுதியில் வான் மார்க்கமாக இஸ்ரேல் படையினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துவருவதுடன், போர் களம் என்பதால் அனைத்து மக்களும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் காசாவில் 7 ஆயிரத்து 700 ற்கும் மேற்பட்டவர்களும் பலியாகியுள்ளதுடன், சுமார் 19 ஆயிரத்து 750 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேலிய படையினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களில் 109 பேர் பலியாகியுள்ளதுடன், ஆயிரத்து 900 பேர் வரை காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.