ஹமாஸ் பிடியிலிருந்து இன்று விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணயக் கைதிகள்
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் கடமைப்பட்டுள்ளது, மேலும் அந்தக் காலம் இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிருடன் உள்ள 20 பணயக் கைதிகள்
இதற்கிடையில், பணயக்கைதிகளை விடுவிப்பது நேற்று நள்ளிரவில் தொடங்கும் என்று இஸ்ரேலிய துணை வெளியுறவு அமைச்சர் ஷரோன் ஹாஸ்கெல் நேற்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார். இருப்பினும், அந்த அறிக்கையை ஹமாஸ் உறுதிப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்ட பணயக்கைதிகளில் 20 பேர் தற்போது உயிருடன் இருப்பதாகவும், நேற்று இரவு அல்லது இன்று விடுவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் காசா அமைதி மாநாட்டிற்கு முன்பு ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிப்பார் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்துள்ளார்,
மேலும் பணயக்கைதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க மருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
2000 பாலஸ்தீனர்களும் விடுதலை
இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனியர்கள் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக விடுவிக்கப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
