இஸ்ரேலின் மொசாட் உளவாளிக்கு ஈரானில் நேர்ந்த கதி
இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் தளவாட அமைப்புகளை உளவு பார்த்து, அந்த தகவல்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுக்கு வழங்கியதாக ஹமித்ரேசா சபேத் எஸ்மெயில்பூர் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து, அவர் கடந்த 2025 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டுகள்
ஈரானிய ஊடகங்களின் தகவலின்படி, இஸ்ரேலுக்கு உதவும் வகையில், ஏவுகணைத் தளங்களை குறிவைத்து உபகரணங்கள் வாங்கியது, வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை இடமாற்றம் செய்தது உள்ளிட்ட செயல்களில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக ஜனவரி 28 புதன்கிழமை அதிகாலை, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர்
கடந்த 2025 ஜூன் மாதம் இஸ்ரேலுடன் ஏற்பட்ட 12 நாள் போருக்குப் பிறகு, ஈரான் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

அந்தப் போரின் போது, ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவங்கள், நாட்டிற்குள் இஸ்ரேல் உளவாளிகள் ஊடுருவியிருப்பதை வெளிச்சத்தில் கொண்டு வந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |