காசா மீது நடாத்தப்படும் கொடூரமான தாக்குதல்களை நிறுத்து..! வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)
பலஸ்தீன - காசா மீது நடாத்தப்படும் கொடூரமான தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது இன்று (4) பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பலஸ்தீன மக்கள் மீது
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,“ மத்தியகிழக்கில் பலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இத் தாக்குதல் மூலம் 4000 ற்கு மேற்பட்ட குழந்தைகளும் 4000 ற்கு மேற்பட்ட பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.
இத்தருணத்தில் தொடர்ச்சியாக அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக இணைந்து அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது மேலும் போரை நடாத்தி நிற்கின்றன.
ஆனால் உலகம் பூராகவும் பலஸ்தீனத்தில் இப்போரை நடாத்த வேண்டாம் எனவும் அப்பாவி பொதுமக்களை கொல்ல வேண்டாம் எனவும் கடுமையாக எதிர்ப்புக்கள் கிளம்பி நிற்கின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியம்
அந்த எதிர்ப்புக்களுடன் எமது ஆதரவையும் பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகின்றோம், அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய பொருளாதார நலன்களுக்காகவும், போரை உருவாக்கி ஆயுத விற்பனையை விரிவுபடுத்தவும் வேண்டி உலகம் பூராகவும் ஆக்கிரமிப்பு போரில் ஈடுபட்டு வருவதை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதுடன் சுதந்திர இறைமை உள்ள பலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறும் நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம்“என்றனர்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்“பலஸ்தீனகுழந்தைகளை கொல்லவேண்டாம், சுதந்திர பலஸ்தீனத்தை அழிக்காதே, அமெரிக்க இஸ்ரேல் கூட்டுக்கு 9 ஆயிரம் பிணக்குவியல் போதாதா”என்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.