ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
புதிய இணைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது.
வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஆகிய மூன்று தீர்மானங்களை தமிழரசுக் கட்சி நிறைவேற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாக செயற்பட்டனர் எனவும் தற்போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் கூடியுள்ளது.
குறித்த கூட்டமானது, வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர்
இந்தநிலையில், குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகைத் தரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (R. Shanakyan), த.கலையரசன், எஸ்.குகதாசன் (Kuagadhasan), எம்.எ.சுமந்திரன் (M.A Sumanthiran), சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |