சிறீதரன் எம்.பியிடம் விசாரணை : தமிழரசுக்கட்சி கடும் கண்டனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின்(itak) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(sritharan) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்(cvk sivaganam) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(10) இந்தியாவில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கு கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக இந்தியா(india) செல்ல சென்றபோது அங்கே விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது
இராஜதந்திர கடவுசீட்டினை வைத்திருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை இவ்வாறு நடத்தியதை ஏற்று கொள்ள முடியாது. சிவஞானம் சிறீதரன் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருப்பதுடன் அவர் இலங்கை நாடாளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்குகின்றார்.
இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றியும் இருந்தார்.
பொறுப்பு அநுர அரசாங்கத்திற்கு உண்டு
இந்த நிலையிலேயே இவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இச்சம்பவம் ஒரு பழிவாங்கும் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்கு தோன்றுகிறது.
எனவே இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அநுர அரசாங்கத்திற்கு உண்டு என அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |