வடக்கில் அகற்றப்படும் இராணுவ முகாம்கள் : அநுர அரசை சாடும் சரத் வீரசேகர
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாக என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் (Sarath Weerasekara) வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி இன்று இந்தியாவுக்கு (India) சாதகமாக செயற்படுகிறது.
அரசாங்கம் இணக்கம்
இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்துவோம்.

தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. இந்த நாடு 30 வருடகால பிரிவினைவாத போராட்டத்தை எதிர்கொண்டது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் தான் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த அமைப்பின் நோக்கம் அழியடையவில்லை. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ளவர்கள் இன்றும் உள்ளார்கள்கள். ஆகவே தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தக் கூடாது.
விசேட அவதானம் செலுத்தியுள்ளார்
புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்படுகிறது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) இவ்விடயத்தில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த அரசியலமைப்பு உருவாக்க சட்ட வரைபு சமஸ்டியாட்சி அரசியலமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
தேசியத்துக்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுவேன். நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே பல்லாயிர இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.
ஆகவே சமஸ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்கி படையினரின் உயிர் தியாகத்தை மலினப்படுத்த இடமளிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை இல்லாதொழிக்க மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        