சுமந்திரனின் அதிரடி அறிவிப்பு - சிறீதரனுக்கு விழுந்த பலத்த அடி: சிதறும் தமிழரசுக் கட்சி
தமிழ்த் தேசிய அரசியலின் முதுகெலும்பாகக் கருதப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள், நிலவும் தலைமைத்துவப் போட்டி, இப்போது நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரனை நீக்குவதற்கான பகிரங்க அறிவிப்புடன் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் ஊடகங்களைச் சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானங்களைச் சிறீதரன் ஏற்க மறுத்தமையால் அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியிட்ட தகவல், கட்சிக்குள் நிலவும் பாரிய உட்கட்சிப் பிளவை அம்பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் முக்கிய நியமனங்கள் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பான விவகாரங்களில் சிறீதரனின் அண்மைக்கால நகர்வுகள் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகச் சுமந்திரன் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள், அவரை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரு நுட்பமான முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
ஒருபுறம் கட்சியின் ஒழுக்கக்கோவை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணவே இத்தகைய அறிவிப்பு விடுக்கப்பட்டதாகச் சுமந்திரன் வாதிடும் அதேவேளை, மறுபுறம் இது திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் பழிவாங்கல் எனச் சிறீதரன் தரப்பு ஆணித்தரமாக தெரிவிப்பது தமிழ் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறீதரனின் செல்வாக்கை முடக்கி, கட்சியின் அதிகாரப் பிடியைத் தன்வசப்படுத்தும் ஒரு இராஜதந்திர நகர்வா இது ? அல்லது கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமா ? என்ற ரீதியில் பலதரப்பட்ட அரசியல் விமர்சனங்கள் தற்போது மேலெழுந்துள்ளன.
இந்தநிலையில், சிறீதரனின் பதவி நீக்க அறிவிப்பின் பின்னணியில் உள்ள உண்மையான காரணிகள் என்ன என்பதையும், இந்த அதிகார மோதல் தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்திலும் மற்றும் எதிர்வரும் தேர்தல்களிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |