தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் தாக்குதல் நடாத்திய குண்டர் ஒரு பாடசாலை அதிபராம்!! நடவடிக்கை எடுக்குமா கல்வித் திணைக்களம்??
கடந்த சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தைத் தொடர்ந்து பொதுக்குழுவில் ஏற்பட்ட கருத்துமோதலின் போது அங்கு கைகலப்பும் ஏற்பட்டது என்பது ஊர் அறிந்த இரகசியம்.
பொதுச் செயலாளர் தெரிவு சம்பந்தமாக ஏற்பட்ட முரன்பாடுகளின்போது அங்கு சமூகம் அளித்திருந்த உறுப்பினர்களில் பலர் தாக்கப்பட்டார்கள். பலர் மிரட்டலுக்கு உள்ளானார்கள். இதற்கென்றே திட்டமிடப்பட்டு அங்கு கொண்டுவரப்பிட்ட குண்டர்கள் கட்சி அங்கத்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், கெட்டவார்த்தைகளில் அசிங்கமாகத் திட்டியதாகவும், மிரட்டல்கள் விடுத்ததாகவும் சில கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.
கூட்டத்தில் கட்சி அங்கத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதில் முக்கியமானவர் ஒரு பாடசாலை அதிபர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
தம்பலகாமம் குளக்கோட்டன் பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலை அதிபரே தன்மீது தாக்குதல் நடாத்தியதாகவும், கட்சியின் நலன் கருதி தன்மீதான தாக்குதலை காவல்துறையிடம் தான் முறையிடவில்லை என்றும் தாக்குதலுக்கு உள்ளான கட்சி உறுப்பினர் எம்மிடம் தெரிவித்திருந்தார்.
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து, மாணவர்கள் வன்முறையில் இறங்குகின்ற சந்தர்ப்பத்தில் அதனைக் கண்டிக்கவேண்டிய நிலையில் உள்ள ஒரு பாடசாலை அதிபரே இதுபோன்ற அடிதடியில் பகிரங்கமாக இறங்குவதையும், வன்முறையில் ஈடுபடுவதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
திருகோணமலை கல்வித் திணக்களம் வன்முறையில் ஈடுபட்ட குறிப்பிட்ட அந்த அதிபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்காக நடைபெற்ற இழுபறிகள் பற்றிய செய்திகள் பல வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. பொதுவாகவே ஒரு அரசியல் கட்சிக்குள் இடம்பெறுகின்ற கோஷ்டி மோதல்கள், இராஜதந்திர வியூகங்கள் இருப்தென்பது எல்லாம் ஜனநாயகச் செயற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், செயலாளர் தெரிவில் நடைபெற்ற சில வினோதமான சம்பவங்கள் பற்றி கவலையுடன் கருத்துத் தெரிவித்திருந்தார்கள் தமிழரசுக் கட்சியின்; சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
- தமிழரசுக் கட்சியின் தலைவர் வடக்கைச் சேர்ந்தவராக இருந்தால் கட்சியின் பொதுச்செயலாளர் கிழக்கைச் சேர்ந்தவராக தெரிவுசெய்யப்படுவது என்பது கட்சியின் ஒரு மரபாகவே இருந்துவருகின்றது. ஏற்கனவே கட்சியின் தலைவர் (சிறிதரன்) வடக்கைச் சேர்ந்தவராக இருப்பதால், கட்சியின் பொதுச்செயலாளராக கிழக்கைச் சேர்ந்த ஒருவரே தெரிவுசெய்யப்படவேண்டும் என்பதில் அனைவருமே ஒருமனமாக இருந்தவந்த நிலையில், திடீரென்று கட்சியின் செயலாளராக போட்டியில் களமிறங்கியிருக்கின்றார் சுமந்திரன். இதனால் தமிழசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும், சுமந்திரனின் ஆதரவாளர் என்று கூறப்படுகின்ற குகதாசனைத் தெரிவுசெய்ய மத்தியகுழு சம்மதித்ததைத் தொடர்ந்து சுமந்திரன் போட்டியில் இருந்து பின்வாங்கியதாகவும் தெரியவருகின்றது. ஏற்கனவே கிழக்கை வஞ்சித்தார் என்கின்ற குற்றச்சாட்டில் சுமந்திரனுக்கு எதிரான பலமான உணர்வலைகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இருந்து வருகின்ற நிலையில், கிழக்கிற்கு வழங்கப்பட இருந்த செயலாளர் பதவிக்கு தானும் போட்டிபோட முன்வந்ததானது ஒருவகையில் கிழக்கிற்கு சுமந்திரன் செய்ய முற்பட்ட துரோகம் என்றே கூறுகின்றார்கள் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
- மட்டக்களப்புக்கு செயலாளர் பதவி வந்துவிடக்கூடாது என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக மும்முரமாகச் செயற்பட்டதாக கூட இருந்தவர்கள் கூறுகின்றார்கள். கட்சியின் செயலாளர் பதவி யாருக்குப் போனாலும் பறவாயில்லை மட்டக்களப்புக்கு, குறிப்பாக சிறினேசனுக்குப் போய்விடக்கூடாது என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியத்தனமாகச் செயற்பட்டதாகக் கூறுகின்றார்கள்.
- வளமை போலவே தமிழரசுக் கட்சியின் தெரிவில் மாவை சொதப்பியதாகக் கூறுகின்றார்கள் மத்தியகுழு உறுப்பினர்கள். கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று அறிவித்து வாக்களிக்கும் பலர் வெளியேறியபின்னர், செயலாளருக்கான வாக்கப்பை நடத்தியுள்ளார் மாவை.
- கட்சியின் செயலாளர் போட்டியில் நின்ற சிறினேசனிடம் விடுக்கொடுக்கும்படி கெஞ்சியிருக்கின்றார் தற்போதைய கட்சியின் தலைவர் சிறிதரன். சிறிதரனும் சொஞ்சம் கொஞ்சமாக ‘மாவையாக’ மாறுகின்றாரா என்று கேள்வி எழுப்புகின்றார்கள் சில உறுப்பிர்கள்.
- கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ‘தான் கட்சிக்கு எதிராக வழக்குப் போடப்போவதாக’ சிறிதரனை மிரட்டி இருக்கின்றார் ‘சுமோ’ என்ற சட்டமேதை. அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.. இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் சென்றிருக்கின்றார் சிறிதரன்.
- பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பை சுமந்திரனே நடாத்தியதாகவும், வாக்களித்தவர்களில் பலர் இரண்டு கைகளையெல்லாம் தூக்கியதாகவும் தெரியவருகின்றது. வேடிக்கை பார்ககவந்தவர்கள்;, உணவுபரிமாறியவர்கள் என்று கட்சிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள் கூட அந்த வாக்களிப்பில் கலந்துகொண்டதாகக் கூறிச் சிரிக்கின்றார்கள் அங்கிருந்தவர்கள்.
ஐயா சிறிதரன் அவர்களே!! தமிழரசுக் கட்சியைப் பார்த்து ஊரே சிரிப்பதற்கு முன்னதாக ஏதாவது செய்யுங்கள்!!