வெள்ளத்தில் காணாமல் போன யாழ். இளைஞர் சடலமாக மீட்பு
கலா ஓயா வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தணிகாசலம் பத்மநிகேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துயர சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த இருதினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
அதன் போது பேருந்தினுள் சுமார் 70 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த கடையொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்தார்.
காணாமல் போன இளைஞன்
பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காணாெளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார்.

அதேவேளை கடையின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும், அதன் போது சிலர் வெள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போதே அவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |