யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மரணங்கள்- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைகின்ற போதிலும், மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
எனவே, அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ள யாழ்.அரச அதிபர், சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியசாலை கொரோனா தொற்றாளர்களுக்கான இடைத் தங்கல் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
200 நோயாளர் படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த சிகிச்சை நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, மாவட்ட அரச அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 வது இடைத் தங்கல் சிகிச்சை முகாம் இதுவென தெரிவித்துள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன், தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் அலட்சியமாக செயற்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.







