யாழ்ப்பாணத்தில் மேலும் அறுவர் கொரோனாவால் உயிரிழப்பு
யாழ். மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட் -19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவராக, சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) என்பவரும் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், கந்தர்மடத்தைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அல்வாயைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.
தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒருவர் சடலமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக உயர்வடைந்துள்ளது.