யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் மின்னல் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
அச்சுவேலி, நாவற்காட்டுப் பகுதியில் இன்று மதியம் உழவியந்திரத்தில் சென்றுகொண்டிருந்தவர்கள், மழை பெய்தமையால் உழவு இயந்திரத்தை நிறுத்திவிட்டு அதற்கு கீழே ஒதுங்கியிருந்த நிலையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் அச்சுவேலி வடக்கை சொந்த இடமாகவும் உடுப்பிட்டியை வதிவிடாகவும் கொண்ட 41 வயதுடைய தியாகராஜா மதனபாலன் என்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அச்சுவேலி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறப்பு தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், விநாயகமூர்த்தி தங்கேஸ்வரன் (38 வயது), கமலநாதன் நிமர்சன்(20 வயது) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளதுடன் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

